டெல்லி:
மக்களை பாதிக்கும் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க ஷாருக்கானை அறிவுறுத்துமாறு அவரது மனைவிக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.
பான் மசாலாக்கள் மனிதர்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் புற்று நோயை உருவாக்க கூடிய போதை வஸ்துகளாகும். அதனால் இது தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்குமாறு இந்தி திரைப்பட நடிகர்களான அஜய் தேவ்ஜ்ன், ஷாருக்கான், அர்பஸ் கான், கோவிந்தா ஆகியோருக்கு டெல்லி சுகாதார துறை கடிதம் எழுதியது.
இந்த கடிதத்துக்கு நடிகர்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து இந்த நடிகர்களுக்கு நெருக்கடி கொடுக்க கெஜ்ரிவால் அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. இந்த 4 பேரின் மனைவிகளுக்கு தற்போது கடிதம் எழுதியுள்ளது.
பொது மக்கள் நலன் கருதி தங்களது கணவர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் மனைவி கவுரிக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், புகையிலை மற்றும் பான் மசாலா தொடர்பான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என நடிகை சன்னி லியோனேவுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் சர்ச்சையில் இருந்து, விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சமயத்தில் நடிகர்களின் விளம்பரம் தொடர்பாக டெல்லி அரசு அனுப்பியுள்ள கடிதம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.