சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டு, அங்கு  மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

சென்னை ராயபுரத்தில் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப்பெண் மற்றும் மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள் தொடக்க  விழாவிற்கு பிறகு  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஒரே வாகனத்தில் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளா அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட வந்தனர். அவர்களுக்கு அண்ணா நூலக வளாகத்தில், தேசிய மாணவர் படையினர்  அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. அந்த மரியாதை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்டாலின் உடன் சென்று நூலகத்தை சுற்றிப் பார்த்தார்,

நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு, ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, ஏழாம் தளத்தில் ஓலைச் சுவடி பிரிவு, ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து எட்டாம் தளத்தில் கலைஞர் நினைவு நூலகம் சார்ந்த குறும்படம் மற்றும் இல்லம் தேடி கல்வி குறித்த குறும்படம் பார்த்துவிட்டு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன் பின்னர் அண்ணா நூற்றாண்டு நூலக வருகை பதிவேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன், சேகர் பாபு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.