சென்னை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான், என  திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்து உள்ளார்.  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை; இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அது தான் என தெரிவித்து உள்ளார்.

திமுக எம்.பி. செந்தில்குமார், இந்துக்கள் தொடர்பான விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே அரசு நிகழ்ச்சியின் அடிக்கல் நாட்டு விழா பூஜையின் போது, இதை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அதுபோல, சமீபத்தில் விநாயகர் சதுர்த்திக்கு, இந்து கோவில்களை பராமரித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை வாழ்த்து செய்தி வெளியிட்டதற்கும் கடுமையாக சாடியிருந்தார்.

‘ “இந்துசமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும்தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல” – கலைஞர்  சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்’ என கூறியுள்ளார்.

தர்மபுரி தொகுதி திமுக எம்பியின் இந்துக்கள் மீதான தொடர் விமர்சனம் திமுக அரசுக்கு பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், செய்தியாளர்களை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தபோது, திமுக எம்.பி.யின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சேகர்பாபு,   விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது தவறில்லை என்றவர்,  இந்து சமய அறநிலையத்துறையின் வேலையே அதுதான் என பதிலடி கொடுத்தார்.  மேலும், வள்ளலார் முப்பெரும் விழா நடத்துவது குறித்து 14பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது; வள்ளலாரின் லோகோ வெளியிடுவது குறித்து முதலமைச்சரிடம் அனுமதி பெற உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் கோவில் சொந்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பல்வேறு மக்கள் நலப்பணிகள், கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.