இம்பால்: பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் பாஜக – நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் பாஜகவின் நடவடிக்கை காரணமாக, அதன் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. தொடர்ந்து, தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து புதிய அரசு அமைந்தது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், மணிப்பூரில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களில் 5 எம்எல்ஏக்கள் நேற்று (செப்.2) பாஜகவில் இணைந்து நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ஏற்கனவே பீகார் அரசியலில் குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், மணிப்பூரில் 5 எம்எல்ஏக்களான, குமுச்சம் ஜாய்கிஷன் சிங், நுர்சங்லூர் சனேட், எம்.டி. ஆசாப் உதீன், தங்ஜம் அருண்குமார், எல்.எம்.கௌட் ஆகியோர் பாஜகவில் இணைந்து மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, மணிப்பூரின் மற்றொரு ஜேடியு எம்எல்ஏ அப்துல் நசீரும் பாஜகவில் இணைய உள்ளதாக அக்கட்சி வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மணிப்பூரில் நிதிஷ்குமார் கட்சி முழுமையாக பாஜகவில் இணையும் என தெரிகிறது. இந்நிலையில் மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என கேஷ் பிரேன் தெரிவித்தார்.
மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 தொகுதிகளில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் பதவியேற்றார். ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 5 எம்எல்ஏக்கள் விலகிய நிலையில் பாஜகவில் தற்போது 37 எம்எல்ஏக்கள் உள்ளனர்.