சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவெடுக்க முடியும் என்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது என்றனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றத்தின் 2நீதிபதிகள் அமர்வு, எடப்பாடி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிக்கலாம் என அனுமதி வழங்கியதுடன், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதையடுத்து தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு 128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியுளனது. அதில், ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் கலவாதியாகிவிட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவு எடுக்க முடியும். சிவில் வழக்குதான் தீர்மானிக்கும்.
உட்கட்சி விவகாரங்களில் சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து செயல்பட முடியாதபோது இருவரும் சேர்ந்து கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவிட முடியாது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு அதிமுகவின் செயல்பாட்டை முடக்கிவிடும். பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஈபிஎஸ் விட்டுக்கொடுத்தார்.
ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை. ஜூன் 23 பொதுக்குழு அன்றே ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியானது செல்லும்.
ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில் 23-க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. ஓபிஎஸ் இருந்தபோது தான் ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என கூற முடியாது.
மோதல் இருக்கும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வாகும் உறுப்பினர்கள் உள்ள அதிமுக பொதுக்குழுவிக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. சிறப்பு பொதுக்குழுவிக்கு இன்னொரு நோட்டீஸ் தர அவசியமில்லை. ஜூன் 23-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை பொதுக்குழுவுக்கான முறையான நோட்டீஸாக கருத முடியும்.
ஓபிஎஸ்-யுடன் மோதல் போக்கு இருந்ததால் ஜூன் 23 பொதுக்குழுவை அவை தலைவர் கூட்டியது சட்ட விரோதம் என சொல்ல முடியாது. எனவே, ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்படுங்கள் என தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.