சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்துள்ளதாக கூறியதுடன், இனி அரசியலில் ஓபிஎஸ் ஜீரோ என விமர்சித்தார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்குகளை தாக்கல் செய்து வருகிறது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி தலைமையிலான பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து, எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவித்தார். மேலும், இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பால் இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டு வாசலில் தொண்டர்கள் இபிஎஸ்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர. மேலும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து கொண்டாடினர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்க்கு அதிமுகவினர் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார். தர்மம் வென்றுள்ளது, நியாயம் வென்றுள்ளதாக தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர், ஒற்றை தலைமை என்ற அங்கீகாரத்தை நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என தெரிவித்தார்.
இரண்டு முக்கிய விஷயங்களை நீதிபதி சொல்லி இருக்கிறார்கள், ஜூலை 11ம் தேதி நடந்த செயற்குழு மற்றும் பொது குழு செல்லும் என தீர்ப்பு கூறியுள்ளனர். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் மீண்டும் கிடைத்துள்ளதாக தெரிவித்தவர், இந்த தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இனி அரசியலில் ஓ பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்யம் என ஜெயக்குமார் விமர்சித்தார்.