சென்னை: சென்னையில் இன்று காலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மேலும் 10 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, இன்று காலை முதல் சென்னையில், தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தால் மிதக்கிறது. வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் பல இடங்களில் பள்ளங்கள் தோட்டப்பட்டு, வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன முதல் மிக கனமழையானது உள் மாவட்டங்களில் பெய்து வந்தது. அதனை ஒட்டி ஒரு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் மிக கனமழையானது பெய்து வருகிறது. இந்த மழையானது வருகின்ற ஐந்தாம் தேதி வரை தொடரும் என்பதை சென்னை மண்டல வானிலை மண்டல ஆய்வு மையம் மற்றும் இந்திய மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் காலை முதல் மீனம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பழம், தாம்பரத்தை ஒட்டிய பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை யானது பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.