டெல்லி: மத்திய அரசின் கறுப்பு பண கொள்கை ‘பேர் அண்டு லவ்லி’ திட்டமாக உள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கறுப்பாக இருப்பவர்கள் பேர் அண்டு லவ்லி கிரீமை தடவினால் வெள்ளையாகலாம் என அந்த நிறுனத்தின் விளம்பரத்தை நாம் டிவி.யில் பார்த்திருப்போம். அது போல தான் மோடியின் கறுப்பு பண கொள்கை இருக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
மோடி அறிவித்துள்ள ‘பேர் அண்டு லவ்லி’ திட்டத்தின் மூலம் கறுப்பு பணம் வைத்திருக்கும் யாரையும் சிறையில் அடைக்கப்போவதில்லை. ஆனால், கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அதை வெள்ளையாக்கிக் கொள்ளலாம்.
கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மோடி உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது அவர்களை பாதுகாப்பதற்கான செயல்களில் அவர்கள் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
இத்தகைய ஒரு திட்டத்தை அருண்ஜேட்லி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறிவிட்டார்.
தலித் மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து, அவரது தாயை அழைத்து ஆறுதல் கூட கூறி மோடி முன்வரவில்லை.
டெல்லி நீதிமனறத்தில் மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைக்கு மோடி இது வரை பதில் கூறவில்லை. அதேபோல் ஜேஎன்யு மாணவர் கண்ணையாவின் பேச்சை நான் கேட்ட வரை அதில் தேசத்துக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அதில் இல்லை. ஜேஎன்யு அல்லது நாட்டின் ஏழை மக்களை இந்த அரசு நசுக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.