ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இநத சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தலைகுனியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநில கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், தாங்கள் தேர்ச்சி பெறாததற்கு சில ஆசிரியர்கள்தான் காரண என சில மாணவர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து, அந்த பள்ளியின் 2 ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் சேர்ந்து இழுத்துச்சென்று மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதாக கூறி ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இந்த சம்பவ்ததில் ஈடுபட்டது அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 11 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த மாணவர்கள், தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் கிளெர்க் சோன்ராம் சவுரே ஆகியோரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
இதையறிந்த சக ஆசிரியர்களும், பெற்றோர்களும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவர்களின் இந்த நடவடிக்கை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், கல்வித்துறை இதுகுறித்து விசாரணை நடத்தியது. மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீது எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வழங்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கோபிகாந்தர் காவல் நிலைய பொறுப்பாளர் நித்யானந்த் போக்தா கூறுகையில், ” சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. சம்பவத்தை சரிபார்த்த பிறகு, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன், ஆனால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் என்று கூறி மறுத்துவிட்டது” என்றார்.
ஆனால், மோசமான மதிப்பெண்களுக்காக மாணவர்களால் தாக்கப்பட்டதால், ஆசிரியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 11 மாணவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை மாணவர் கட்டி வைத்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.