ஜேஎன்யு
டெல்லி:
ஜேஎன்யு தேச துரோக செயலுக்கு ஆதாரமான வீடியோவில் இரு காட்சிகள் போலியாக திருத்தம் செய்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு ஆதரவாக 7 வீடியோ பதிவுகளை டெல்லி அரசு கைப்பற்றியுள்ளது.
கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில் இந்த வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் உண்மை தன்மையை கண்டறிய ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில், 7 வீடியோ பதிவுகளில் இரு பதிவுகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது நிரூபணமாகியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 9ம் தேதி நடந்த அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சியில் உமர் காலித்துடன் கண்ணையா புடைசூழ வருவது போல் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்சல் குரு, காஷ்மீர் விடுதலை குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 11ம் தேதி ஜனநாயக மாணவர் சங்கத்தினர், அப்சல் குருவுக்கு ஆதரவாக நடத்தியதாக கூறப்படும் நிகழ்ச்சியின் வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இதில் 9ம் தேதி பதிவு செய்யப்பட்ட வீடியோவில் இருந்த ஆடியோவை மட்டும் எடுத்து, 11ம் தேதி நடந்த நிகழ்ச்சியின் வீடியோவில் இணைத்துள்ளனர்.
இதன் மூலம் 2 வீடியோக்கள் டப்பிங் செய்து போலியாக தயாரித்திருப்பது நிரூபணமாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில் தான் கண்ணையா தேசத்துக்கு துரோகம் விளைக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.