புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க , தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுறது. காங்கிரஸ் கட்சியானது 2வது முறையாக கடந்த 2019 மக்களவை தேர்தல் உட்பட தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனையடுத்து ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ஆகஸ்ட் 21 – செப்டம்பர் 20ம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், தலைமையுடன் மோதல் போக்குடன் இருந்து வருகின்றனர். அதேநேரம் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் கட்சித் தலைவராக வர வேண்டுமென சில மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச்சூழலில் கட்சியின் மூத்த தலைர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சி பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். அத்துடன் அவர் ராகுலை கடுமையாக விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அக்கட்சிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இத்தகைய பரபரப்பான சூழலில், இன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இதில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை முடிவு செய்யப்பட உள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, அவருக்கு உதவியாக சென்றுள்ள ராகுல், பிரியங்கா ஆகியோரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே கூட்டத்தில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். இதனால், தலைவர் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.