சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கில், அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு விசாரணைக்கு  ஆஜராக வேண்டும் என்றும்  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், உத்தரவாம் படி நடிகர் விஷயால் நடந்துகொள்ளவில்லை என்றும்,  தங்களுக்கு வழங்க வேண்டிய கடன் பாக்கியான  21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ள பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், விஷயால் இதுவரை நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை.

இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.

விஷால் தரப்பில் லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்று தெரிவித்ததுடன்,   தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கும் வட்டி கட்டி வருவதாக தெரிவித்தவர், நீதிமன்ற உத்தரவுபடி அந்த பணத்தை  6 மாதங்கள் ஆனாலும்  செலுத்த இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் லைகா தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்,  நடிகர் விஷால்தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், நீதிமன்றத்துக்கு  தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், வேண்டுமானால் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும் என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, தொடர்ந்து படத்தில் நடிக்கும்போது கடனை திரும்ப செலுத்தலாமே என்றும், திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டது என சொல்ல வருகிறீர்களா என விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.

சினிமா வாழ்க்கை முடிந்ததாக கூறவில்லை எனவும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும் நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினமும் நீதிமன்றத்தில் விஷால் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.