மதுரை: தமிழகத்தில் 4,484 போலீஸாருக்கு மன அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டா) விசாரணைக்கு எடுத்து, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த வழக்கில் காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை நீதிபதிகள் வழங்கினர்.
இந்த சூமோட்டா வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் காணொலி வழியாக ஆஜராகி தமிழகத்தில் காவலர் நல்வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: காவலர் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.2 லட்சம் போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிக்காக பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்காக 2018-ல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழகத்தில் 98,531 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் 4,484 போலீஸார் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஒதுக்கிய ரூ.10 கோடியில் இதுவரை ரூ. 6.79 கோடி செலவாகியுள்ளது. தொடர் பயிற்சிக்காக தமிழக அரசு மேலும் ரூ.61.51 லட்சத்தை ஆக.2-ல் ஒதுக்கியது . கரோனாவால் 2020 பிப்ரவரி முதல் 2021 அக்டோபர் வரை பயிற்சி முகாம்கள் நடைபெறவில்லை. இதனால் நிமான்ஸ் உடனான ஒப்பந்தம் நடப்பாண்டு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்தாண்டு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சூமோட்டா வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.