சென்னை: அரசு அலுவலகங்களில் பதவி உயர்வு வழங்குவது உள்பட முறைகேடு நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது என உயர்அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது, செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப்பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசுக்கு  குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதை உறுதிப்படுத்திய தலைமைச்செயலாளர் இறையன்பு உயர்அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக,  அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், குறிப்பாக தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் செயற்கை காலிப்பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதை தவிர்ப்பதோடு,  தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்குமாறு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.