மும்பை
அமலாக்கத்துறையினர் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை ரூ. 1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் அமலாக்கத்துறை முன் சஞ்சய் ராவத் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
அப்போது அவரிடம் இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் ஜூலை 20 ஆம் தேதி இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது., அந்த தேதியில் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.
அதைத் தொடர்ந்து 27-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குப் பின் ஆஜராவதாக சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தார்.
இன்று காலை, மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு நில மோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் மகாராஷ்டிராவில்கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.