நவகைலாய ஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ. தொலைவில் உள்ள மிக பழமையான நவகைலாய ஸ்தலங்களில் ஏழாம் தலமான தென்திருப்பேரை கைலாசநாதர்சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் தென்திருப்பேரை ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும்.
நவகிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரை என்பது நமக்குத் தெரியும். இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் காட்சிதரும் சூரியன், சந்திரன், குரு பகவான், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களுமே குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், குரு பகவானும், சுக்கிர பகவானும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்தியா பகவான் பத்து குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இது வேறெங்கும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் சுவாமி கைலாசநாதர் தாமரை வடிவ பீடத்தின் மீது, லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். சரவிளக்கு சுடர்விடும் கருவறைக்குள் பெருமானை கண்குளிர கண்டு வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.
இங்குக் கார்த்திகை மாதம் சோமவாரம், புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி ஆகிய வருடாந்திர விழாக்களும், பிரதோஷம், அஷ்டமி வழிபாடு போன்ற மாதாந்திர வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகிறது.