டெல்லி: உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் மாநிலங்கள், தாங்கள்  ‘வாட்’ வரி மூலம் பெற்ற வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே  உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டதாக மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை எதிர்க்கட்சியினர், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும், பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் அரிசி, கோதுமை, பால், தயிர், நெய் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. போன்றவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், உணவுப்பொருட்களுக்கு 5சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் விளக்கம் அளித்துள்ளார். அதில்,  உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்தது, மத்திய அரசி்ன் முடிவு அல்ல. அது ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதை சுட்டிக்காட்டினார்.

பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலக்குகளை நீக்குவதற்கு மாநிலங்கள் முழுமையாக ஆதரவளித்துள்ளன என்றும்,  ஜிஎஸ்டியில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், வலிப்புள்ளிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இப்போதே தீர்க்க அரசாங்கம் முயற்சி செய்யும் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், விகிதக் கட்டமைப்பு மதிப்பாய்வு சிறிது நேரம் எடுக்கும், என்றவர், வரி வருவாய் வளர்ச்சி வலுவாக இருப்பதாகவும், நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். அனுராதா சுக்லா & தீப்ஷிகா சிகர்வார் ஆகியோரின் நேர்காணலின் பகுதிகள்.

2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பே சில மாநிலங்கள் மேற்கண்ட உணவு பொருட்களுக்கு ‘வாட்’ வரி விதித்து வந்தன. அதிக வருவாய் ஈட்டி வந்தன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தியபோது, அந்த உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரியை தொடர முடிவு செய்யப்பட்டது. ஆனால், வர்த்தக பெயர் (பிராண்டட்) கொண்ட உணவு பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது.

இந்த விதிவிலக்கை தவறாக பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள் கூட வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொண்டன. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. நேர்மையாக வரி செலுத்திய நிறுவனங்கள் இதுகுறித்து முறையிட்டன.

மாநிலங்களும், ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு உணவு பொருட்கள் மீதான வரியால் நிறைய வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாய் தற்போது கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசிடம் முறையிட்டன. ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தின.

எனவே, மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகளின் அதிகாரிகள் அடங்கிய ‘பிட்மெண்ட்’ குழு இதுபற்றி ஆய்வு செய்து, சில சிபாரிசுகளை அளித்தது. பின்னர், சில மாநிலங்களின் மந்திரிகள் அடங்கிய மந்திரிகள் குழுவும் ஆய்வு செய்து சிபாரிசுகளை அளித்தது.

பின்னர், மத்திய நிதி மந்திரி தலைமையில் அனைத்து மாநில நிதி மந்திரிகளும் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பிராண்டட் பொருள், பிராண்டட் அல்லாத பொருள் என்ற வேறுபாடின்றி, பாக்கெட்டில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு கருத்தொற்றுமையுடன் முடிவு எடுக்கப்படுவது வழக்கம். ஒரு மாநிலம் கவலை தெரிவித்தால் கூட அதன் கவலையை போக்குவோம் அல்லது அந்த முடிவை எடுக்காமல் விட்டு விடுவோம். அப்படி முடிவுகள் கைவிடப்படுவதை நான் பல தடவை பார்த்துள்ளேன்.

அத்தகைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன், கருத்தொற்றுமையுடன் உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.