சென்னை: அதிமுக அலுவலகத்தில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற மோதலின்போது, அலுவலக பூட்டை உடைத்துச் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் கட்சி அலுவலக அசல் பத்திரங்களை திருடிச்சென்றுவிட்டதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு அன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டி அடித்ததுடன், அங்குள்ள ஆவணங்களை வண்டியில் ஏற்றிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகின. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம், சீலை அகற்ற தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகரனிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக அலுவலகம் மீண்டும் திறக்கப்பட நிலையில் இபிஎஸ் தரப்பினர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு இருந்ததுடன், அதிமுக அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. அதன்படி, அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை காணவில்லை என தகவல் கூறப்படுகிறது. மேலும், மூன்றாவது தளத்தில் இருந்த ஹார்டு டிஸ்க், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த மற்றும் முக்கியமான பொருட்களை காணவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாகவும்,அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக எம்.பி.யான சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம், கோவை, புதுச்சேரி, திருச்சியின் அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது, சென்னையில் உள்ள சபையர் தியேட்டர் பத்திரம் மற்றும், தேவர் சிலையில் போர்த்தப்படும் தங்க கவத்திற்கான ஆவணங்கள், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதகள், 37 வாகனங்கன் அசல் பதிவு சான்றிதழ் உள்பட ஏராளமான ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது, ஓபிஎஸ் வந்த வாகனத்தில்தான் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.