சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணாக்கர்கள் உயர்கல்விக்கான கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்திய படி, தற்போது, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மேலும், CBSE மாணவர்களுக்கு இடமில்லை என்று எந்த தனியார் கல்லூரியும் சேர்க்கையை மறுக்கக் கூடாது வரும் 27வரை அவகாசம் உள்ளதால், CBSE மாணவர்களுக்கும் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டும் சேர்க்கை மறுக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், UGC விதிகளின் படி தகுதி பெறாமல் அரசு கலை/அறிவியல் கல்லூரிகள் & கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் விவரங்களைக் கோரி இருப்பதாகவும், அந்த விவரம் கிடைத்த உடன், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், இதுவரை பொறியியல் படிப்பான B.E.,B.Tech., படிப்புகளில் சேர 1,90,706 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில், 1,39,536 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர், 1,25,172 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால், மேலும் சில ஆயிரம் மாணாக்கர்கள் பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது.
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள். இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.
தற்பொழுது முதல்வரின் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியிலும், அதேபோன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
மாணாக்கர்கள் 20.07.2020 தேதி முதல் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014, 044-22351015 தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.