ஜூலை: ஆன்லைன் ரம்மியால் கோவையில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதை நிரந்தரமாக தடை செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையின பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு போலீஸ்காரர் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன்தொல்லை காரணமாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். விருதுநகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 29). இவர் கோவை மாநகர ஆயதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் கடந்த சில நாட்களாக போலீஸ்காரர் காளிமுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்றும் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று போலீஸ்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. துப்பாக்கியின் சப்தம் கேட்டு அரங்கில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து பக்கத்து அரங்கில் இருந்த வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது அங்கு, காவலர் காளிமுத்து துப்பாக்கி குண்டு பாய்ந்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
துப்பாக்கி தோட்டா துளைத்ததில் காளிமுத்துவின் சிறுநீரகம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 1மணியளவில் போலீஸ்காரர் காளிமுத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போலீஸ்காரர் காளிமுத்து கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். எப்போதும் அதிலேயே அவர் மூழ்கி கிடந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் தங்கள் நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்து காளிமுத்து வாங்கிய கடனை அடைத்துள்ளனர்.
இருப்பினும்தான் கடனாளி ஆகி விட்டதாலும், குடும்பத்தினரை தான் கஷ்டப்படுத்தி விட்டதாலும் காளிமுத்து கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த விரக்தியிலேயே நேற்று பணியில் இருந்த போலீஸ்காரர் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த காவலர் காளிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு தில்லை நாயகி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.