சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை நோய் தொற்று பரவல் இல்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட அனைவருக்கும் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் கேரளா பார்டரில் உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குரங்கு அம்மை எதிரொலி காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு குறித்து இன்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் 8,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குரங்கு அம்மை நோய் இந்தியாவில் நுழையாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கேரள வழிகளான 13 இடங்களில் பரிசோதனை செய்யபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை. நோய் கண்டறிவதற்கான ஆய்வகம் சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும், தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. அதனால், சென்னை வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பிரியாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக மருத்துவ துறை திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.