சென்னை: மாநில அரசின் ஓய்வூதியம் பெரும் நபர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அஞ்சல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ந்தேதிக்குள், , அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்று ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமாண் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்களின் பகுதிக்குரிய தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.