சென்னை: அதிமுக பொதுக்குழு – இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ், அதிமுக அலுவலகம் சென்று, ஆவணங்களை அள்ளி சென்றதுடன், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கவும் காரணமாக இருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், நேற்று எடப்பாடி நடத்தியது, விதிமீறல் பொதுக்குழு என்று கூறியதுடன், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என கூறியதுடன், ஓபிஎஸ் உள் பட எங்களை நீக்கிய தீர்மானமும், இதர தீர்மானங்களும் செல்லாது என கூறினார்.
மேலும், அதிமுக நிர்வாகம் மற்றும் சின்னத்தை எங்களுக்கு தர தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம் எனவும் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுகவின், இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என அறிவிக்க கோரியும் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.