AMU
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

டெல்லி:
கடந்த 2010ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) சார்பில் வளாகம் கடந்த மையங்களை 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முர்ஸிதாபாத், மலப்புரம், கிஷ்ணகன்ஜ், போபால், புணே ஆகிய இடங்களில் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, வரும் 2020ம் ஆண்டில் முழு அளவில் செயல்படுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் மலப்புரத்தில் மையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் எம்பி.க்கள் அடங்கிய குழுவினர் கடந்த ஜனவரி 8ம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியை டெல்லியில் சந்தித்து பேசினர்.
‘‘ஏஎம்யு வளாகம் கடந்த மையங்கள் அனைத்தும் முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப்ப்டடுள்ளது. அதனால் அவை அனைத்தும் மூடப்படும். எப்படி ஒரு மையத்தை இவ்வாறு ஆரம்பிக்கலாம். இதை தொடங்க பல்கலைக்கழக துணைவேந்தருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அதனால் நாங்கள் நிதி கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய மையங்களை தொடங்க வேண்டிய அவசியமில்லை. அதனால் அவற்றை மூட நான் முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.
‘‘இதற்காக 345 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மையம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உம்மன் சாண்டி கேட்டுக் கொண்டதற்கு ஸ்மிரிதி ராணி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் சமீருதீன் அங்கு வந்தார். ‘‘ ஏன் இங்கே வந்தீர்கள்’’ என ஸ்மிரிதி ராணி கேட்டுள்ளார். ‘‘கேரளா முதல்வர் அழைத்ததால் வந்திருக்கிறேன்’’ என அவர் மரியாதையாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணி‘‘ உங்களுக்கு யார் சம்பளம் வழங்குகிறார்கள். கேரளா முதல்வரா?, மனித வள மேம்பாட்டு துறையா?, திரும்பிச் சென்று உங்கள் அறையில் உட்காருங்கள்’’ என மிரட்டியுள்ளார்.
இதனால் அங்கிருந்த கேரளா குழுவினர் முன்னிலையில் அவமானமடைந்த துணைவேந்தர் வேறு வழியின்றி அங்கிருந்து சென்றுவிட்டார்.
வளாகம் கடந்த மையங்கள் அமைப்பது என்று துணைவேந்தர் முடிவு எடுத்ததாக கருதி மத்திய அமைச்சர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆனால் 2006ம் ஆண்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாக குழு ஒப்புதலின் பேரில், 2010ம் ஆண்டில் ஜனாதிபதி இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
மல்லப்புரம் வளாகத்தில் 2015ம் ஆண்டில் 13 விரிவுரையாளர்கள், 13 ஆயிரம் மாணவர்களுடன் செயல்பட திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 3 பாடப்பிரிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டு, 400 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இதேபோன்ற நிலை தான் அனைத்து மையங்களிலும் உள்ளது. முர்ஸிதபாத்தில் இந்த மையத்தை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையங்கள் உருவானால் முஸ்லிம் இன மக்கள் கல்வியறிவை பெற்று முன்னேற்றமடைய கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் தான் பாஜ அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மையங்களை மூட முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.