கிரேட் பெர்சன்.. கே.பி….
மேடை நாடகங்களில் கலக்கி வந்தவருக்கு தனது தெய்வத்தாய் (1964) படத்தில் வசனகர்த்தா வாய்ப்பு வழங்கி திரையுலகை திறந்துவிட்டார் மக்கள் திலகம்.திலகம்..
திறமை ஜொலிக்கும் என்பதற்கு அடையாளம் அடுத்த படமான சர்வர் சுந்தரம். படத்தை இயக்கியது கிருஷ்ணன்- பஞ்சு இரட்டையர் என்றாலும் நாகேஷின் நடிப்புக்கு அடுத்தபடி ஜமாய்த்தது இவரின் வசனமே..
நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநர் சீட்டில் அமர்ந்த வருக்கு அற்புதமாக கை கொடுத்தவர்கள் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெமினி, சவுகார் ஜானகி, முத்துராமன் போன்றோர்.
பாமா விஜயம், எதிர்நீச்சல், புன்னகை, இருகோடுகள் என வெற்றிப்பயணம் அமர்க்களமாகவே ஆரம்பமானது. ஆனால் எழுபதுகளில், பெரும் எதிர்பார்ப்போடு நடிகர் திலகத்துடன் கைகோர்த்த எதிரொலி படம் படுதோல்வி யடைந்தபோது, சற்றே சுதாரித்துக்கொண்டார். இதன் பிறகே பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி சகலத்தையும் தன் ஆதிக்கத்தில் வைத்து க்கொண்டார்..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இரண்டும் கெட்டான் வயதில் தவித்துக்கொண்டிருந்த கமலுக்கு ஹீரோ அந்தஸ்த்தில் அரங்கேற்றம் படம் மூலம் பெரிய பிரேக் கிடைக்கச்செய்தவருக்கு புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் ஆர்வமும் அதிகரித்தது..
அவள் ஒரு தொடர்கதை மூலம் சுஜாதா,, அபூர்வ ராகங்கள் படத்தில் துண்டு ரோலால் ராஜபாட்டை கிடைக்கப்பெற்ற. இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினி, மன்மத லீலையில் அறிமுகமாகி இந்திய திரையுலகம் முழுவதும் பவனி வந்த ஜெயப்பிரதா, பின்னாளில் பிரகாஷ்ராஜ் என இவரின் நட்சத்தி அறிமுக பட்டியல் சதத்தை தாண்டும் அளவுக்கு நீளமானது..
இவர் இயக்கிய ஜெமினி கணேசனின் தயாரிப்பான நான் அவனில்லை,, சகல அம்சங்களையும் கொண்ட விறு விறுப்பான படம். காட்சிகளில் சுவாரஸ்யம் காட்ட விரும்புகிறவர்ளுக்கு ஒரு பாடம் அது..
இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் சிவகுமார் போன்றோர் தங்கள் பேர் சொல்லவேண்டும் என்றால் சிந்துபைரவி போன்ற படங்களைத்தான் சொல்லவேண்டியிருக்கும்..
மூன்று முடிச்சு, அவர்கள், நிழல் நிஜமாகிறது, தப்புத்தா ளங்கள், என எம்எஸ்வி, .கண்ணதாசன் கூட்டணியோடு கறுப்புவெள்ளைகளில் மாஜிக் பாடல்களோடு அசத்திய வர் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவும் தவறவில்லை..
கமல், ரேவதி நடிப்பில் இளையராஜா இசையில் அவர் நிகழ்த்திய பிரமிக்க தக்க படைப்பான புன்னகை மன்னன் படமே இதற்கு சாட்சி..
இன்னொரு குறும்புத்தனமும் இவரிடம் உண்டு.. தன் படங்களையே மீண்டும் உட்டாலக்கடி செய்து அழகன், கல்கி என தடாலடி செய்துவிடுவார்.
பட்டிணபிரவேசம், நூல்வேலி போன்ற படங்களெல்லாம் காட்சி அமைப்புகளுக்காக, பாடல்களுக்காக அணுஅணுவாய் ரசிக்கும் இவரின் ரசிகர்கள் முன் விவாதத்தில் இறங்கினால் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்..
கமல், ரஜினிக்கு திரையுலக காட்பாதரும், தாகே பால்கே விருதுபெற்றவருமான மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 92 வது பிறந்த நாள் இன்று.
கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்