டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும்  காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 பேரில் 27 பேர் இன்று  ராஜ்யசபா எம்.பியாக  பொறுப் பேற்றனர். அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மரும் இன்று பதவி ஏற்றார்.  அவர்களுக்கு துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்யசபாவில் காலியாக உள்ள 57 பதவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. அதில்,  11 மாநிலங்களில் 41 வேட்பாளர்கள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டி நிலவிய மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 16 தொகுதிகளுக்கு ஜூன் 10தேதி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து,  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில், இன்று  10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பேர் அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத் தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன்,  பியூஷ் கோயல் உள்பட 18 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். மேலும்,  காங்கிரஸ் தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் பதவியேற்றனர். அதிமுகவை சேர்ந்த ஆர்.தர்மர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மொத்தம் 57 உறுப்பினர்களில் 14 பேர் மீண்டும் இரண்டாவது முறையாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.