சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டதும், மாணவர்களின் உயர்கல்விக்காக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆனால், மத்தியரசின் சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே  சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு (டெர்ம் 2) முடிவுகளை ஜூலை 4, 2022 மற்றும் ஜூலை 10, 2022 அன்று அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டது, பின்னர் இந்த தேதிகள் மாற்றப்பட்டது.  தற்போது, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2022 டெர்ம் 2 தேர்வு முடிகள் ஜூலை 13ஆம் தேதியிலும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிகள் ஜூலை 15ஆம் தேதியிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடாமல் இருப்பதால், அந்த கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்கள், உயர்கல்விக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளது.

இந்த நிலையில், பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 5 நாள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் இன்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.