சென்னை: தற்காலிக ஆசிரியரை நியமிக்க என்ன அவசரம்?” என இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழகஅரசு தாக்கல் செய்த வழக்கில், கேள்வி எழுப்பிய நீதிபதி, இடைக்கால தடையை நீக்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு, அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்புவது முறைகேடுக்கு வழிவகுப்ப தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம், சர்ச்சையான நிலையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதி மன்றம், தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்ய தடை விதித்ததுடன், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய ஆலோசனை கூறியது.
இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு காரணமாக, 13 மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு என்ன அவசரம்? என தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பினர். ஆசிரியர்கள் பணிக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்யலாமே என அறிவுறுத்தியதுடன், வழக்கு பட்டியலிடப்பட்டபடி ஜூலை 8ந்தேதி விசாரிக்கப்படும் என்று கூறியதுடன், தடை தொடரும் என்றும் கூறினர்.