மும்பை:  நாளை ஆட்சி நிலைக்குமா என தெரியாத நிலையில், மும்பை விமான நிலையம் உள்பட பல நகர்களின் பெயரை மாற்ற உத்தவ் தாக்கரே அமைச்சரவை இன்று மாலை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலை முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், விமான நிலையம் உள்பட சில நகர்களின் பெயர்களை மாற்ற கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், ஒஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர்  டிபி.பட்டீல் சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் மாற்றம் செய்ய  ஒப்புதல் அளித்துள்ளது.