டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் மற்றும் அஞ்சல் சேவை, சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றும், இன்றும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.  இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில், சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் லாட்டரி ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் புதன்கிழமை ஒத்திவைத்துள்ளது. பள்ளி குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியநிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 2-வது நாளில், ஜூன் 2022க்கு அப்பால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது மற்றும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றில் 28 சதவீத வரி குறித்த அமைச்சர்கள் குழு (GoM) அறிக்கை போன்ற பிரச்சினைகள் குறித்து மீண்டும் விவாதிக்கப்படும் என்றார்.

பென்சில் ஷார்ப்பனர், ரப்பர், பிளேடு, கத்தி, எல்இடி விளக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை எந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% லிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000-க்கும் குறைவான ஓட்டல் அறை வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

அஞ்சல்  சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது.

மின்னணு கழிவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% லிருந்து 18% ஆக உயர்வு.

வணிக பெயரில் அல்லாத பாக்கெட்டில் விற்கப்படும் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாக விற்கப்படும் அரிசி, பருப்புக்கு வரி விலக்கு தொடரும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக்கூட்டம் மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.” எனக் கூறினார்.