சென்னை: ஓபிஎஸ்-க்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், 2441 பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமான நிலையில், கடந்த 23ந்தேதி அதுதொடர்பான பிரச்சினை எழுப்ப எடப்பாடி ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கால் எடப்பாடியின் கனவு சிதைந்தது. இதையடுத்து, அடுத்த அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, ஓஓபிஎஸ் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.