சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசி அவமானப்படுத்தப்பட்டு ஓபிஎஸ் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சுமார் 1மணி நேரத்தில் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது. மேலும், பொதுக்குழுவில் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து பேச முயன்ற ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர். இதனால் மேடையில் இருந்து இறங்கி பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோரை எதிர்த்து முழக்கங்கள் கடுமையாக எழுப்பப்பட்டது. அவர்கள் மீது தீர்மான நகலை கிழித்து எறிந்தனர்.
இந்த நிலையில், அவர் பொதுக்குழுவுக்கு ஊர்வலமாக வந்த பிரசார வாகனமும் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த ஓபிஎஸ் வேறு வாகனத்தில் வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை 6மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.