44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க இன்னும் 38 நாட்களே உள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் ஷெரட்டன் குழுமத்துக்கு சொந்தமான ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக இரண்டு தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரத்யேக முதல் அரங்கு சுமார் 24,000 ச.அடி. பரப்பளவும், இரண்டாவது துணை அரங்கு சுமார் 30,000 ச.அடி பரப்பளவிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய செஸ் பெடரேஷன் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் இந்த போட்டிக்காக தமிழ்நாடு அரசு 92.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக 36 ஹோட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலை மற்றும் நடைபாதை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
போட்டி நடைபெறும் அரங்கு மற்றும் வீரர்கள் தங்கும் இடங்களில் மின் தடை ஏற்படாத வகையில், ஆலந்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மகாபலிபுரத்துக்கு நேரடி மின் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதுடன் மின்மாற்றிகள் உள்ளிட்டவை நவீனமுறையில் மாற்றப்பட்டு வருகிறது.
அரங்கில் இரண்டு மும்முனை மின்னிணைப்பு தவிர ஜெனரேட்டர் மற்றும் யூ.பி.எஸ். ஆகியவையும் பொருத்தப்பட்டு சிறு மின்தடை கூட ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட அளவில் செஸ் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் என மொத்தம் 500 மாணவர்களுக்கு இந்த போட்டியைக் காண சிறப்பு அனுமதி வழங்கப்பட இருப்பதாகவும் அதற்காக கல்வித்துறை அதிகாரிகளிடம் தகவலளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீரர்கள் தங்கும் இடங்களில் இருந்து போட்டி அரங்குக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் அவர்களை மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டியைக் காண வருபவர்களுக்கு பூஞ்சேரி மகாபலிபுரம் சந்திப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது அங்கிருந்து ஷட்டில் சர்வீஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தவிர, போட்டி நடைபெறும் நாட்களில் மகாபலிபுரத்துக்கு உள்ளே எந்த வாகனமும் செல்ல முடியாதபடி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் நகரின் மூன்று நுழைவு சாலைகளிலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் அருகில் உள்ள கிராமங்கள் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தாஜ் ஹோட்டல் குழுமத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மும்பையைச் சேர்ந்த ‘செப்’ ஹேமந்த் ஓபராய் சர்வதேச வீரர்களுக்கான உணவு தயாரிப்பை கவனித்துக் கொள்வார்.
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவகங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபிக், ஆங்கிலம் மற்றும் ரஷ்யன் உள்ளிட்ட ஆறு மொழிகளில் போட்டி நிகழ்வுகளை மொழிபெயர்க்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.