சென்னை: திட்டமிட்டபடி 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்து, ஓபிஎஸ் தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிக்குள் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் நிடித்து வருகிறது. இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து, திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், இன்று ஓபிஎஸ் தரப்பில், அ.தி.மு.க. பொதுக் குழுவை தள்ளி வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் , எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதை அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி ஆதரவாளர்கள், அதிமுக பொதுக்குழுகூட்டம் திட்டமிட்டபடி 23ந்தேதி நடைபெறும் என தெரிவித்தனர்.  அ.தி.மு.க. பொதுக் குழுவை இப்போது நடத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்துவருகிறது. தற்போது,  அதை நிரூபிக்கும் வகையில் அவர் கடிதம் எழுதி உள்ளார் என்று குற்றம் சாட்டியவர்கள், அ.தி.மு.க.வுக்கு அமைப்பு ரீதியான தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் அவர்களை வைத்து பொதுக் குழுவை நடத்தலாம் என்று விளக்கம் அளித்தனர்.

மேலும், நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று விளக்கம் அளித்துடன், பொதுக்குழுவை கூட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில், போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி 23-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.