சென்னை; அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 23ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட உள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடிக்கு அதிக ஆதரவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கட்சி, எடப்பாடி கைக்கு சென்றுவிடம் சூழல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று,. ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, 30 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்தவர்கள், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என  எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளத தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை என கூறினார்.  தொடர்ந்து, அந்த ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை படித்து விளக்கம் அளித்தார்.

அந்த கடிதத்தில்,  23.6.2022 அன்று நடைபெற உள்ள கழகப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க அ.தி.மு.க.வின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 14.6.2022 அன்று மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்ததற்கு, முன் அறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுவாக கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் வாரிய தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவிற்கு அழைப்பது நமது கழகத்தால் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை 23.6.2022 அன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாக தங்களையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.

புரட்சித்தலைவர் அம்மா அதே மண்டபத்தில் பலமுறை கழகத்தின் பொதுக்குழுவை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப் பட்டனர். இப்போது அதே மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தங்களது ஆதங்கத்தை தெரியப்படுத்து கின்றனர். இது மட்டுமல்லாமல், முன் அறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து 14.6.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள், கழக சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத்தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கழக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டுவிட்டர் மூலம் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விவரம் கிடைக்க பெறவில்லை என கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பல மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்காணும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கழகத்தின் நலன் கருதி 23-ந்தேதி அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும் அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

30 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.