சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். காவல்துறையில் இருந்து முறை யான பதில் தராததால், வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை தலைமையில் தொடர்ந்து வரும் அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை கடந்த சில நாட்களாக எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தின்போது மோதல்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு அளித்துள்ளார். அவரது மனுவில், ‘ அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருப்பதால் போக்குவரத்து சீரமைப்பு, காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்தும் அதுகுறித்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும், கூட்டத்திற்கு ஓரிரு தினங்களே இருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாளை மறுநாள்(ஜூன் 22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.