சென்னை: ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது, இந்த திட்டத்தை சோதனையில் முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கேழ்வரது உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால், இதை செயல்படுத்தலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டி முதல் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்காக, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ் வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.