டெல்லி: மத்தியஅரசு அறிவித்தள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், ராகுல்காந்தி கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி, வலுத்து வருகிறது. பிகார், அரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்தியஅரசை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ‘அக்னி பாத்’ திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்த வுள்ளதாக அறிவித்துள்ளது.
அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தியும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், கட்சியின் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் டெல்லி வருமாக கட்சி தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளது. நாளை (19-ந்தேதி) டெல்லியில் சத்தியாகிரக போராட்டம் நடக்கும் நிலையில், இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சோனியாகாந்தி உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் தலைமையின் திடீர் அழைப்பு காங்கிரசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி தலைமையின் அழைப்பை ஏற்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் இன்று டெல்லி செல்கிறார்கள்.