டெல்லி: பெண் எம்.பி.க்கள் உள்பட காங்கிரசார் மீது டெல்லி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். தொடர்ந்து ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடமும் புகார் கூறினர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக சோனியாகாந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில், அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் காவல்துறையினர் வரம்பு மீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோதிமணி குண்டு கட்டாக கைது செய்யப்பட்டார். அப்போது தான் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து, டெல்லி மீது காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும், டெல்லி போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டதாக, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுதரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று நேரில் சந்தித்து புகார் கூறினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்ட டெல்லி போலீஸ் மீது புகார் தெரிவித்து எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம். குறிப்பாக பெண் உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் மிருகத்தனமானது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினரான தலைவர் ராகுல் காந்தி அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணைக்கு அழைத்து கொடுமைப்படுத்தும் அமலாக்கப்பிரிவு துறைக்கு எதிராகவும் புகார் தெரிவித்ததாகவும், சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும், தெரிவித்துள்ளனர்.