டெல்லி: அக்னி பரிட்சை வேண்டாம் என  அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை செய்துள்ளார். அதுபோல பிரியங்கா காந்தியும் இளைஞர்களின் கனவுகளை நொறுக்காதீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த முறையில் இளைஞர்களை தேர்வு செய்யும் வகையில் அக்னிபாத் என்ற திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி,  17வயது முதல் 21வயதுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அவர்களி தேவைப்பட்டால்,  ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில்  சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு பீகார் உள்பட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராணுவத்தில் சேருவதை தங்களது கொள்கையாக கொண்டுள்ள இளைஞர்கள், மத்தியஅரசின் திட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று பீகாரில் வன்முறையாக வெடித்தது.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,  “ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்கு நேரடியாக ஆள் சேர்ப்பு கிடையாது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் கிடையாது, ராணுவத்தின் மீது இந்த அரசுக்கு மரியாதை கிடையாது.

நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் குரலைக்கேளுங்கள் பிரதமர் அவர்களே. அவர்களை அக்னிப்பாதையில் நடக்க விட்டு அவர்களது பொறுமை மீது அக்னிப் பரிட்சை நடத்த வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ள டிவிட்டில், “ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்படும் புதிய திட்டம் அவர்களுக்கு என்ன கொடுக்கப்போகிறது? 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை உத்தரவாதம் கிடையாது. ஓய்வூதியம் வசதியின்மை, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு நிகர். இளைஞர்களின் கனவுகளை நொறுக்காதீர்கள் (பிரதமர் நரேந்திர மோடி)” என்று பதிவிட்டுள்ளார்.