மும்பை: விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஸ்பைட்ஜெட் நிறுவன நிர்வாகி தெரிவித்து உள்ளார். எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்தியாவில் குறைந்த கட்டணத்தில், அதிக அளவிலான விமான சேவைகளை வழங்கி வருகிறது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அஜய் சிங், விமான பயண கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜய்சிங், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால், விமான கட்டணத்தை 10-15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது என்றவர், ஜூன் 2021 முதல் விமான எரிபொருள் விலை 120 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள் கிறேன் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசியவர், எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இத்தனை நாட்கள் இவற்றை தாங்கிக் கொண்டோம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றவர், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. அதனால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட. விமான கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவில் விமான கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பை ஸ்பெஸ்ஜெட் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.