சென்னை: கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து தொகுப்புக்கான டெண்டர் வேறு நிறுவனத்துக்கு இறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகஅரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும்  ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் கொள்முதல் செய்வதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில், அதற்கான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதன்படி, விதிமுறைகளை மீறி ‘அனிதா டெக்ஸ்காட்’ என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதையடுத்து, தமிழகஅரசு, இதுதொடர்பான டெண்டர் உறுதி செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன், விதிமுறைகளின்படி ஊட்டச் சத்து பெட்டகத்துக்கான டெண்டர் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் இன்று திறக்கப்பட்டது. அதில், தகுதியின் அடிப்படையில் ‘ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல்ஸ்’ என்ற நிறுவனம், ஊட்டச்சத்து பெட்டகத்தில் அடங்கிய 8 பொருட்களை சப்ளை செய்வதற்கான டெண்டரை பெற்றிருக்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டெண்டர் தொடர்பாக, அண்ணாமலை கூறிய நிறுவனமான,  ‘அனிதா டெக்ஸ்காட்’ நிறுவனத்திற்கு கொடுக்கப்படவில்லை என்றும், அண்ணாமலை தனது குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அல்லது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்த டெண்டர் விவகாரத்தில், அண்ணாமலை தெரிவித்த டெண்டர் ஆதாரங்கள் உண்மையா, பொய்யா என்பதும், தமிழகஅரசு இறுதி நேரத்தில் டெண்டரை மாற்றியதா? என்பது குறித்தும், தமிழகஅரசு அண்ணாமலை மீது தொடரும் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது வெளிச்சத்துக்கு வரும். யார் கூறுவது உண்மை என்பது அதன்பிறகே மக்களுக்கு தெரிய வரும்.

அண்ணாமலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை