சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுதினம் (வரும் 13ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங் களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும், சுத்தப்படுத்தப்பட்டு, மாணாக்கர்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பு வசதிகளை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, கடந்த 2 வருடத்திற்கு பிறகு தற்போது முழுமையான வகையில் பள்ளிகள் தொடங்குவதால் பாதுகாப்பு வசதிகளை ஒவ்வொரு பள்ளியிலும் செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். பள்ளி வளாகம், வகுப்பறை தூய்மை, கழிப்பிடம், குடிநீர் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க கல்வி அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதையடுத்து, தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை அழைத்து வரும், வாகனங்களில் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன விதிகளின்படி அனைத்து பாதுகாப்பு வசதிகளும் உள்ளதா என்று வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னையில் செயல்படும் சுமார் 1000 தனியார் பள்ளிகளில் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். அயனாவரம், அண்ணாநகர், வியாசர்பாடி, பேசின்பிரிட்ஜ், வளசரவாக்கம், கே.கே.நகர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வட்டார போக்கு வரத்து அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் சோதனை இன்று முதல் தொடங்கியது. இந்த ஆய்வின் போது போலீஸ் வருவாய்த்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உடன் உள்ளனர்.
இந்த ஆய்வில், பள்ளி வாகனத்தின் படிக்கட்டு உறுதியுடன் உள்ளதா? வாகனத்தின் உறுதி தன்மை, முதல் உதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசர கால உதவி போன்றவை முறையாக செயல்படுகிறதா என்பதை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து வருகின்றனர்.