சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தலைமைச்செயலகத்தை நோக்கி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்த போராட்டதில் சுமார் 3ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பேரணியையொட்டி, பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை 20 நாட்களுக்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 கடந்து அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 முறை குறைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பை, தமிழக அரசும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், தமிழகம் உள்பட சில மாநில அரசுகள் மத்தியஅரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்தி விட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்துவிட்டு மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், கடந்த 8 வருடங்களில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைப் பலமுறை உயர்த்தியபோதும், ஒருமுறை கூட மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எந்தவொரு மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், ஆலோசனையும் செய்யாமல், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கடுமையாக உயர்த்தியது. இப்போது, வெறும் 50 சதவிகிதம் மட்டுமே வரியைக் குறைத்துவிட்டு மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயமே இல்லை” என்று கூறியிருந்தார்.
இருந்தாலும் மற்ற கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழகஅரசை வலியுறுத்தி வருகின்றனர். இருதுகுறித்த செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “அரசியல் லாபத்துக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்கள், தற்போது விலையை குறைக்க மறுத்து வருகிறார்கள். அதனால், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க வேண்டும், அதேபோல, கேஸ் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்” என்று அதிரடியாக அறிவித்தார்.
ஆனால், அண்ணாமலை விதித்த 72 மணி நேர கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், பாஜக போராட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியானது. ஆனால், மே 31-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர், ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” யில் இருந்து பேரணி தொடங்கி கோட்டை நோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முன்னதாக பாஜக தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் எதிரி ஆர்.எஸ் பாரதி தான் என கூறியதுடன், திமுக சொன்னதை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், சொன்னதை செய்யாததால் தான் இந்த போராட்டம் என தெரிவித்த அண்ணாமலை, முழு பூசணிக்காயை முதலமைச்சர் சோற்றில் மறைப்பதாக குற்றச்சாட்டினார். இந்த விடியா அரசை இத்தோடு விடப்போவதில்லை என்றும், தமிழ்நாடு தற்போது கஞ்சா நாடாக மாறி வருவதாகவும், வீடு முழுவதும் கஞ்சா, தலைநகரம் முழுவதும் கஞ்சாவாக மாறி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அமைச்சர்கள் தப்பித்தவறி பேசும் ஆங்கிலத்தை பார்க்க பயமாக உள்ளது என தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை பார்த்து பிரதமர் பயந்து போயிவிட்டார் என குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மட்டுமல்ல தமிழகமே பயந்துவிட்டது என குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி தொடங்கிவிட்டது என தெரிவித்தவர், கச்சத்தீவை கனவிலும் கூட திமுகவால் மீட்க முடியாது என தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு அதனை எப்படி மீட்பது என தெரியும் என கூறினார்.
மேலும், எங்களுக்கும் மீடியாவுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. மீடியா என்கிற போர்வையில் இருக்கும் திமுகவினருடன் தான் பிரச்னை என தெரிவித்த அண்ணமலை, மீடியாவுக்கான மரியாதை 3 மடங்கு கிடைக்கும். ஆனால், ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்ட வேண்டும் என்றால் அது முடியாது என கூறினார்.
எங்கள் கோரிக்கையை ஏற்று பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை என்றால் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை எனில் திருச்சியை நோக்கி பாஜகவினர் வருவார்கள், திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், 20 நாட்களுக்குள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும், திமுகவின் நினைப்பு திமுகவுக்கு அஸ்தமனத்தை தரப்போகிறது என விமர்சித்ததுடன், திமுகவா பாஜகவா என்பது இரண்டு வருடங்களில் தெரியவரும் என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதகவும் அவர் தெரிவித்தார்.