கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 13

பா. தேவிமயில் குமார்

 

சம்மர் கேம்ப்

நுங்கு வண்டி பயணமும்,
நுணாப் பழமும், நினைவில்…

பம்பரமும், பரமபதமும்
பல்லாங்குழியும், சுற்றுகிறது கண்ணில் !

மண்ணில் மறைத்து வைத்த
சிறு குச்சியை தேடுகிறேன் இன்றும் !

காரப்பழமும், காட்டுமல்லியும்
கிடைக்கிறதா, இப்போதும் ?

ஈச்சம்பழமும், ஏழுகடல் தாண்டிய
கதைகளும் கேட்க…. மனம் ஏங்கும் !

ஒற்றைக்கால் மடக்கியே
ஓடிக்கொண்டிருந்த நாட்கள் !

நீச்சல் கற்றுக்கொள்ள
சுரைக்குடுவை கொடுத்தது தைரியம் !

தாயமும், பல்லாங்குழியும்
தேடப்படுகிறது பரணில் !

“ஐஸ்வாங்கலியோ” குரலுக்கு
இணையில்லை எந்த விளம்பரமும் !

ஒரு புத்தகமும், சிலேட்டும்
உலகத்தை காட்டிய நாட்களது !

வறுத்த, பொறித்த
உணவில்லாத, ஆரோக்கியமான காலமது !

ஊரடங்கிய பின்னும்
விவித பாரதியின் குரல்….

சட்டிகளும், அகப்பைகளும்
சமயலறை செல்வங்களான காலம் !

கலர் கண்ணாடிகளும்,
கலர் பாயாசமும் ருசித்த நாட்கள்

ஆடு, கோழியோடு லாரியில்
அனைவரும் பயணித்தோம் திருவிழாவிற்கு !

வருடம் முழுவதும் கடந்த நாட்கள்
விடுமுறையாகவே எண்ணப்பட்டது !

பெருமூச்சுடன் என்
பிள்ளை “சம்மர் கேம்ப்”
படிவத்தை நிரப்புவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன் !