ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவப்பெண் கூட்டு பாலியல் வன்முறை மற்றும் எரித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் பிரகாஷ், ரஞ்சன் ராணாவை வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண் காணாமல் போன விவகாரத்தில் பகீர் தகவல் வெளி யானது. அந்த பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்க்கும் வடமாநிலத்தவர்கள், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்றது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த ஒடிசா ஊழியர் களையும் சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 ஊழியர்களை மீட்டு தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில், காலை பண்ணையில் இருந்து வெளியே வந்த இவர்கள் 7 பேரும், பகல் 1 மணிக்கு மேல்தான் பணிக்கு திரும்பியதும், ஒடிசாவுக்கு ரயிலில் செல்வதற்காக அவசர அவசரமாக மாலையில் 6 பேர் டிக்கெட் முன்பதிவு செய்ததும் தெரிந்தது. அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையைத் தொடர்ந்து 2 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூன் 10ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.