சென்னை
வரும் மே 26 அன்று புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் அறிவித்துள்ளார்
சென்னை பெரும்பாக்கத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய தொழில் நுட்பத்தில் கட்டுப்பட்டுள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்களைத் தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமைச்சர் தா மோ அன்பரசன் செய்தியாளர்களிடம், “சென்னை பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உலகளாவிய வீட்டு வசதி தொழில் நுட்பமான முன் மாதிரி வடிவமைக்கப்பட்ட கட்டிட முறையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1152 குடியிருப்புகள் ரூ.116.37 கோடி செலவில் தலா 96 குடியிருப்புகள் கொண்ட 12 கட்டிடத் தொகுப்புகளில் தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது .
ஒவ்வொரு குடியிருப்பிற்கும் மத்திய அரசின் மானியம் ரூ.5.50 லட்சமும், மாநில அரசின் மானியம் ரூ.3.50 லட்சமும், பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.1.50 லட்சமும் ஆக மொத்தம் குடியிருப்பு ஒன்றிக்கு ரூ.10.50 லட்சங்கள் செலவிடப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 406 சதுர அடி பரப்பளவில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கட்டிடத் தொகுப்புகளிலும் இரண்டு மின்தூக்கி வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய் தளம், சூரிய மின் உற்பத்தி, மேல்நிலை தண்ணீர் தொட்டி ஆகியன அமைக்கப்பட்டுள்ளது.
வரும் மே 26 ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் 26-ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இத்திட்டப் பகுதியினை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளை வழங்க உள்ளார். இதைப் போல் முன் மாதிரி வீட்டு வசதி திட்டம் குஜராத் , ஜார்க்கண்ட் , மத்தியப் பிரதேசம் , உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் முதன் முதலாக உரியக் காலத்திற்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.