சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து உள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொலை கைதிகளை திமுக அரசு வரவேற்று உபசரித்து இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து,நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு தமிழகம் முழுவதும் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, யாரை குற்றவாளி எனக்கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ, அதே நீதிமன்றம் தற்போது அதே குற்றவாளியை விடுதலை செய்து உள்ளது. இதனால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துள்ளது. மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விட்டது. இந்த தீர்ப்பு காரணமாக, எதிர்காலத்தில், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.