ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலை குற்றவாளியான பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஜாமீனில் உள்ளார்.

31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்ததை காரணமாக கூறி இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

1991 ம் ஆண்டு மே 21 அன்று மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் ராஜிவ் காந்தி. அவரை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு தேவையான 9 வோல்ட் பேட்டரி இரண்டை வாங்கிக் கொடுத்த பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஐ.பி.சி. 302 ன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு இந்த வழக்கை விசாரித்த பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அதனை பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது உச்ச நீதிமன்றம்.

இதனைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியது, இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருந்தபோதும் 2018 ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததால் இது தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகார பிரச்சனை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கட்டமைக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் தீர்மானம் மீது 161-வது சட்ட பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 142ன் கீழ் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 142ன் கீழ் சிறப்பு அதிகாரம் பெற்றுள்ளது உச்சநீதிமன்றம். தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது அத்தகைய உத்தரவை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்த சட்ட பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது.

எந்த ஒரு மாநில அல்லது மத்திய அரசோ உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்கவில்லை என்றாலோ அல்லது அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றாலோ, நீதிமன்றமே நேரடியாக உத்தரவை நிறைவேற்ற இந்த சட்டப் பிரிவு வழிவகை செய்கிறது. சுருக்கமாக கூறினால், நீதிமன்றமே நேரடியாக அந்த வழக்குக்கான உத்தரவை நிறைவேற்ற இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 வகை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பிரம்மாஸ்த்திரம் இதற்கு முன் 2019 ம் ஆண்டு அயோத்தி ராமர் கோயில் வழக்கிலும், 1989 ம் ஆண்டு போபாலில் நடந்த யூனியன் கார்பைட் விஷவாயு மரணத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெரும் வழக்கிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.