கொழும்பு:
இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே விலகினார். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம், வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மக்கள், மகிந்த ராஜபக்சேவின் வீடு உட்பட ஆளுங்கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள் பலரின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
2வது நாளாக நீடித்த வன்முறையில், பசில் ராஜபக்சேவின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், இலங்கை தங்காலையில் உள்ள ராஜபக்சே சகோதர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சே சிலை, போராட்டக்காரர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது. இந்த வன்முறையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பொதுசொத்துக்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை முப்படைகளுக்கும் அனுமதி வழங்கி பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நாளை காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.